கோயில் செயல் அலுவலர் pt desk
குற்றம்

திருவாரூர் | ஊதிய உயர்வு வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய பெண் கோயில் செயல் அலுவலர்

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கோயில் ஊழியரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: விஜயகுமார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக ஜோதி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த கோயிலில் எழுத்தராக சசிகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்ற நிலையில், இதுவரை ஊதிய உயர்வு வழங்காமல் செயல் அலுவலர் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ஊதிய உயர்வு 2 லட்சம் வழங்குவதாகக் கூறி அதற்கு ஒரு லட்சம் லஞ்சம் தர வேண்டும் என செயல் அலுவலர் ஜோதி கேட்டுள்ளார். இதுகுறித்து கோயில் எழுத்தர் சசிகுமார் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் ரசாயனம் தடவிய பணத்தை செயல் அலுவலர் ஜோதியிடம் சசிகுமார் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையிலான போலீசார், செயல் அலுவலர் ஜோதியை கையும் களவுமாக பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.