குற்றம்

தொடரும் போலி வாட்ஸ்அப் சர்ச்சை - திருவள்ளூர் ஆட்சியர் சைபர் கிரைமில் புகார்

Sinekadhara

திருவள்ளூர் ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ள நிலையில் சைபர் கிரைமிலும் ஆட்சியர் புகாரளித்துள்ளார்.

சமீப காலமாக மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களில் போலி வாட்ஸ் அப் கணக்கு தொடங்கப்பட்டு பணம் மற்றும் பரிசு பொருட்களை அனுப்ப செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அவற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆட்சியர் புகைப்படம் வைத்த போலி வாட்ஸ் அப் கணக்கில் அதிகாரிகள் அமேசான் பரிசு பொருட்களை அனுப்புமாறு ஆட்சியர் கேட்பதாக தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

எனவே யாரும் அதனை நம்பி பணமோ, பரிசு பொருட்களோ அனுப்ப வேண்டாம் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமில் புகாரளித்துள்ளார். இதனைதொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலி வாட்ஸ் அப் கணக்கு கொண்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.