செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் கே.ஆர்.வி. எனப்படும் கே.ஆர்.வெங்கடேஷ். இவர், பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி காவல் ஆணையரகத்தில் பண மோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஞாயிறன்று மதுரைக்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை கே.ஆர்.வெங்கடேஷ் சமூக வலைதளங்களில் கே.ஆர்.வெங்கடேஷ் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த தீபன் சக்ரவாரத்தி என்பவர் கே.ஆர்.வெங்கடேசன் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் குறித்து புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதனடிப்படையில், செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜா ராபர்ட், எண்ணூர் காவல் உதவி ஆணையர் வீரகுமார் தலைமையிலான காவல் துறையினர், கே.ஆர்.வெங்கடேசனை செங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பின் அவரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.