திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் வங்கிப் பணிக்கு வந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர்கள் உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக காமநாயக்கன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வங்கியின் பின்புறம் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து திருப்பூர் மாவட்ட எஸ்பி திஷா மிட்டலுக்கும், பல்லடம் டிஎஸ்பி முருக வேலுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், இந்த கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வங்கியிலிருந்த 18 லட்ச ரூபாய் பணம் மற்றும் 500 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்தது. மேலும் வங்கியில் வைத்திருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்தும், ஹார்டு டிஸ்க்குகளை திருடியும் சென்றுள்ளனர்.
3 மாதங்கள் காத்திருந்து கொள்ளையர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற பகீர் பின்னணி குறித்த தகவல் கிடைத்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த வங்கியில் ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து வங்கிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த மர்ம நபர்கள் வங்கிக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க மாவட்ட எஸ்.பி. திஷாமிட்டல் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.