குற்றம்

நெல்லை: அறுவை சிகிச்சைக்கு சென்றவர் வீட்டில் 60 பவுன் தங்க நகைகளை திருடிய கொள்ளையர்கள்

webteam

வெள்ளி விளக்கை ஓரமாக எடுத்து வைத்து விட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் நெல்லையை சேர்ந்த சில கொள்ளையர்கள்.

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள மாறன் குளத்தைச் சேர்ந்தவர் சமுத்திர பாண்டி. இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஒய்வு பெற்றதால் ஊரில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அதற்கான சிகிச்சை பெறுவதற்காக மங்களூருக்கு கடந்த செவ்வாய் அன்று குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இவர் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சென்றது அறிந்த மர்மநபர்கள், நேற்று இரவு இவரது வீட்டில் உள்ள இரண்டு கதவுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்த இரண்டு பீரோக்களை உடைத்து அதில் இருந்த 60 பவுன் தங்க நகைகளை திருடியுள்ளனர். அதேநேரம் அந்த பீரோவில் இருந்த 2 வெள்ளி விளக்குகள் மட்டும் தட்டுகளை அப்படியே எடுத்து அங்கிருந்து கட்டில் மீது ஓரமாக ஒதுக்கி வைத்து சென்றுள்ளனர்.

தங்கம் திருட வந்தவர்களுக்கு தங்கத்தை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்பது போல் அதனை ஒதுக்கி வைத்திருப்பது விசித்திரமான சம்பவமாக மாறியுள்ளது. இதேபோல இன்னொரு அறையில் இருந்த பீரோவில் இருந்து ஒரு விலை உயர்ந்த லேப்டாப்பையும் எடுத்துவிட்டு வீட்டிற்கு வெளியே வரும்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் பைக்கையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இன்று காலை அவரது வீடு திறந்து இருப்பதை அறிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது யாருமில்லாததால் சமுத்திரபாண்டிக்கு உறவினர்கள் போன் செய்துள்ளனர். அப்போது அவர் மங்களூரில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் வீடு உடைக்கப்பட்டு திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பலவூர் போலீசில் அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாயும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்துள்ள கைரேகைகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அருகில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை கொண்டும் திருடர்களை தேடி வருகின்றனர்.