குற்றம்

வாடகைக்கு வீடு எடுத்து ஹைடெக் திருட்டு: ’எம்பிஏ’ படித்துள்ள திருடர் குல திலகம் கைது!

webteam

சொகுசு பிளாட்களில் வாடகைக்கு வீடு எடுத்து ஹைடெக் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ’எம்பிஏ’ திருடர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை விக்ரோலி அருகேயுள்ள சந்தன் நகரில் உள்ள பிளாட் ஒன்றில் வசித்து வந்தவர் தனய் அகர்வால் (30). இவர் வீட்டில் ரூ.10 லட்சம் அளவிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கடந்த சில நாட்களுக்கு முன் திருட்டுப் போயின. இதுபற்றி அகர்வால் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் களத்தில் இறங்கினர். பல கட்ட விசாரணைக்குப் பிறகு அவரது பக்கத்து வீட்டில் வசித்த ஹிம்மந்த் பீட்டர் டிரெபெல்லோ என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

சந்தேகத்தின் பேரில்தான் விசாரித்தனர். ஆனால் அவர் 25 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் எம்பிஏ படித்தவர் என்பதும் அவர் மனைவி சாப்ட்வேர் இன்ஜினீயர் என்பதும் போலீசாருக்கு இன்னும் அதிர்ச்சி அளித்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

ஹிம்மந்த், வசதியானவர்கள் வசிக்கும் பகுதிகளில் வாடகைக்கு வீடு பார்ப்பாராம். அங்கு குடியேறி அக்கம் பக்கத்து வீடுகளை நோட்டம் விடுவார். அவர்களுடன் பழகுவார். யார், யார் எப்போது வெளியூர் அல்லது பிக்னிக் செல்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வார். அவர்கள் சென்றதும் பால்கனி வழியாக வீட்டுக்குள் நுழைவார். பிறகு திருடுவார். இதுதான் இவரது ஹைடெக் திருட்டு ஸ்டைல்! கணிசமான தொகையோ, நகையோ கிடைத்ததும் வீட்டை காலி பண்ணிவிடுவார்களாம்.

இப்படியே 26 இடங்களில் கை வைத்திருக்கிறாராம் இந்த திருடர் குல திலகம்! இதுபற்றி சந்தன் நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கூறும்போது, ’பால்கனி வழியாக திருடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் இவர். இவரும் இவர் மனைவியும் அதிகமாகப் படித்துள்ளனர். இப்படி படித்துவிட்டு திருட்டில் ஈடுபடுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அகர்வால் வீட்டினர் பிக்னிக் செல்வது இவருக்கு தெரிய வந்திருக்கிறது. அவர்கள் சென்றதும் ஹிம்மந்த் திருடியுள்ளார். வரும் 14-ம் தேதி வரை காவலில் எடுத்துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார். இந்த விசாரணையில் மேலும் பல திருட்டுத் தகவல்கள்தான் வெளிவரலாம் என எதிர்பார்க்கின்றனர் போலீசார்.