சிசிடிவி ரெக்கார்டரை திருடிவிட்டால் மாட்டாமல் தப்பித்துக்கொள்ளலாம் என தப்புக்கணக்குப்போட்டு பர்தா அணிந்துசென்ற திருடனை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர் மும்பை காவல்துறையினர்.
மும்பை ததார், சேனாபதி பாபட் மார்க்கெட் நகரிலுள்ள நாமன் மிட் டவுன். இந்தக் கட்டடத்திலுள்ள 14வது மாடியில் ஜிக்னேஷ் மேக்தா என்பவரது அலுவலகம் அமைந்திருக்கிறது. இவர் ஜனவரி 31ஆம் தேதி காவல்துறையை அணுகி புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது அலுவலத்திலிருந்து வெள்ளி மற்றும் பணம் திருடுபோய்விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். திருடனைத் தேடிச்சென்ற போலீசாருக்கு சூப்பர் ஷாக் கொடுத்திருந்தார் அவர். ஜனவரி 29ஆம் தேதி பணம் மற்றும் நகையைத் திருடிய அவர், ஜனவரி 30ஆம் தேதி மீண்டும் அதே அலுவலகத்திற்குச் சென்று சிசிடிவி ரெக்கார்டரையும் திருடிச்சென்றது தெரியவந்திருக்கிறது. இதனால் இந்த திருடனைப் பிடிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.
15 நாட்களாக 140 சிசிடிவி கேமராக்களிலிருந்து கிட்டத்தட்ட 130 வீடியோக்களை ஆராய்ந்து, சல்லடைப்போட்டு தேடிய போலீசாரின் வலையில் மற்றொரு திருட்டின்போது சிக்கியிருக்கிறார் அந்த பர்தா திருடன். காட்கோபார் பகுதியில் பர்தா அணிந்து மற்றொரு கொள்ளையில் ஈடுபட்டபோது பிடிபட்டிருக்கிறார். விசாரணையில் அவர் 34 வயதான பல்வந்த் குப்தா என்பது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.5.35 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பர்தா அணிந்துகொண்டு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் குப்தா ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’கழிப்பறை வழியாக அலுவலகத்திற்குள் நுழைந்த குப்தா முதல் சிசிடிவி கேமிராவை சுவரைப் பார்த்து திருப்பி வைத்திருக்கிறார். இருப்பினும் அவர் சாக்குப்பையுடன் நடமாடியது பக்கத்து அலுவலக சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. அதுதான் போலீசாருக்கு கிடைத்த முதல் துருப்பு. அங்கிருந்து ரூ.8.12 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் ரூ.7 லட்சம் பணத்தை திருடிச்சென்றார். மேலும், சிசிடிவி ரெக்கார்டரையும் திருடிச்சென்றுவிட்டார். கிட்டத்தட்ட 10 நாட்களாக ததார் பகுதியிலுள்ள 140 சிசிடிவி கேமிராக்களிலிருந்து 130 வீடியோக்களை ஆய்வுசெய்தோம். மற்றொரு குற்றத்தில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடிபட்டார் குப்தா’’ என்று கூறியுள்ளனர்.