குற்றம்

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு தண்டனை அதிகரிக்க வாய்ப்பு - டிஐஜி. ரூபா பேட்டி

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு தண்டனை அதிகரிக்க வாய்ப்பு - டிஐஜி. ரூபா பேட்டி

webteam


பெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறியது குறித்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறி உள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த டிஐஜி ரூபா, 

"சசிகலா சிறையில் இல்லாமல் சிறைக்கு வெளியே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நான் விசாரித்தேன். அதை நேரடியாக கண்டுபிடிக்கவும் முயற்சி செய்தேன். ஆனால் என் கண்ணில் அவர் மாட்டவில்லை. அப்படி அவர் வெளியில் சென்றதை நான் கண்டுபிடித்திருந்தால் நான் எடுக்கும் நடவடிக்கை பயங்கரமாக இருந்திருக்கும். இதேபோல சசிகலா சிறைக்குள் ஆப்பிள் ஐ போன் மற்றும் 2 சிம்கார்டு வைத்திருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவரிடம் சோதனை நடத்தி இதனை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வெளியில் உள்ளவர்களிடம் தொடர்பில் இருக்கிறார். அந்த பணிகள் இன்னும் நிற்கவில்லை.

தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுத்ததாக டெல்லி போலீசாரால் விசாரிக்கப்பட்ட தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் பிரகாஷ் என்பவர் அவரை சந்தித்துள்ளதாக எனக்கு நம்பிக்கையான தகவல் கிடைத்தது. சசிகலாவுக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிறையில் விதிமுறைகளை மீறியது குறித்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது."

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கும் மற்ற கைதிகளுக்கும் செய்து கொடுக்கப்பட்ட சிறப்பு வசதிகள் குறித்து 2 அறிக்கைகளை டி.ஐ.ஜி. ரூபா கூடுதல் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மற்றும் போலீஸ் டிஜி.பி. தத்தா, உள்துறை அதிகரிகளுக்கு அனுப்பி இருந்தார். அதில் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட 5 அறைகள், அதில் செய்யப்பட்டிருந்த வசதிகள், ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.