திருவாரூர் அருகே நகை மற்றும் அடகு கடையின் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 8 கிலோ வெள்ளி மற்றும் 30 கிராம் தங்க நகையைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்ராஜ் என்பவர் திருவாரூர் அருகே மாங்குடியில் நகை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையின் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட பக்கத்து கடைக்காரர் காவல்துறையினருக்கு தன்ராஜூக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்த காவல்துறையினர் கடையை திறந்து பார்த்தப்போது, சுவரில் துளைப்போட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது.
மேலும் கடையிலிருந்த 8 கிலோ வெள்ளி மற்றும் 30 கிராம் தங்க நகைகள் கொள்ளைபோயிருந்ததை கண்டுபிடித்தனர். இதற்கிடையில், காவல்துறையினர் பிடியில் சிக்காமல் இருக்க, கடையிலிருந்த சிசிடிவி கேமிராக்களை உடைத்துவிட்டு, ஹார்ட் டிஸ்க்குகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
கடையின் உரிமையாளர் தன்ராஜ் அளித்த புகார் அடிப்படையில் கொள்ளை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கடந்த 27ஆம் தேதி தனியார் வங்கியின் சுவரை துளையிட்டு, லாக்கரில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோன்று தற்போது திருவாரூர் மாவட்டம் மாங்குடியில் மற்றொரு கொள்ளைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதியிலுள்ள ஒரு கடையில் இப்படி ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த அதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து திருவாரூர் டிஎஸ்பி நடராஜன் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகிறார்.