வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் அடியாட்கள் மிரட்டியதால் கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேல்நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தசாமி, தனக்குச் சொந்தமான 65 சென்ட் நிலத்தை, 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். கோவிந்தசாமியிடம் இரண்டரை லட்ச ரூபாய் அளித்து மீதி பணத்தை 3 மாதத்துக்குள் தருவதாக ஜெய்சங்கர் ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. ஒப்பந்த தேதி முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் மீதி தவணையை தராமல் ஜெய்சங்கர் ஏமாற்றி வந்ததால், கோவிந்தசாமி குரும்பட்டி பகுதியை சேர்ந்த கமலநாதன் என்பவருக்கு இடத்தை விற்பனை செய்துள்ளார். இதனால் ஜெயசங்கருக்கும், கோவிந்தசாமிக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது.
இருதரப்பிலும் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதில், வரும் 20ஆம் தேதி ஜெய்சங்கருக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதாக முடிவு செய்துள்ளனர். ஆனால், பேச்சுவார்த்தையை மீறி ஜெய்சங்கர் அடியாட்களுடன் வந்து கோவிந்தசாமியை மிரட்டியதால், மனமுடைந்த கோவிந்தசாமி, வீட்டுக்கு திரும்பி வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து வேலூர் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்ட கோவிந்தசாமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.