குற்றம்

யூடியூப் சேனல் மூலம் அரங்கேற்றப்பட்ட மோசடி: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் 

JustinDurai
பெண்களுக்கு சுய தொழில் வாய்ப்பு என ஆசை வார்த்தைக்கூறி யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கோவையைச் சேர்ந்த சரளாதேவி என்பவர் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பு அளிப்பதாக, கோதை நாச்சியார் என்ற பெண் நடத்திவரும் யூடியூப் சேனலில் ஏராளமான வீடியோக்கள் வெளியிட்டார். நாப்கின், விளக்கு திரி உள்ளிட்டவைகளை தயாரிக்க பயிற்சி அளித்து தொழில்வாய்ப்பு ஏற்படுத்துவதாகவும் இதற்கு முன்பதிவு மற்றும் இயந்திரங்கள் வாங்கித் தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். அனைவரும் கூகுள்பே மூலம் பணம் அனுப்பியுள்ளனர். ஆனால் தீபாவளிக்கு முன்பாக யூடியூப் பக்கத்தில் இருந்த அனைத்து வீடியோக்களும் திடீரென நீக்கப்பட்டு செல்போன் எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் தான் பணம் செலுத்தியவர்களுக்கு ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
எனவே சரளாதேவி, கோதை நாச்சியார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுதர வேண்டும் என சுமார் 60 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.