குற்றம்

தங்கையால் அக்காவுக்கும் அவரது குழந்தைக்கும் நேர்ந்த சோகமான முடிவு

தங்கையால் அக்காவுக்கும் அவரது குழந்தைக்கும் நேர்ந்த சோகமான முடிவு

kaleelrahman

அசகளத்தூரில் சொத்துக்காக அக்கா மற்றும் அவரது குழந்தையை அரிவாளால் வெட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த தங்கை கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு சுமதி, சுஜாதா என்ற மகள்கள் உள்ளனர். சின்னசாமி இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இந்நிலையில் இளைய மகள் சுஜாதா பிரசவத்திற்காக தனது அப்பா சின்னசாமி வீட்டிற்கு வந்து தங்கியிருந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகிறது. 


இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன் குப்பத்தில் தனது கணவருடன் வசித்து வந்த சின்னசாமியின் மூத்த மகள் சுமதி, தனது ஒரு வயது மகள் ஸ்ரீ நிதியுடன் தனது தந்தை சின்னசாமியின் வீட்டிற்கு வந்துள்ளார். சின்னசாமி கூலி வேலைக்கு பெங்களூரு சென்று விட்ட நிலையில் அம்மா மயிலும் வயல் வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் அக்கா சுமதியும் தங்கை சுஜாதாவும் தங்கள் குழந்தைகளோடு இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சுமதி தீயில் எரிந்த நிலையில் உடலில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக தலையில் வெட்டுக் காயங்களுடனும் ரத்தம் கொட்டியவாறு அலறி துடித்தபடி வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார். அதேவேளையில் சுமதியின் குழந்தை ஸ்ரீ நிதியும் தீக்காயங்களுடன் அலறித் துடித்து கொண்டு இருந்துள்ளது.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சுமதிக்கு ஆடை அணிவித்து 108 ஆம்புலன்சை வரவழைத்து சுமதியையும் அவரது குழந்தையையும் அருகிலுள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் சுமதி கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று இரவு சுமதி இறந்து போயுள்ளார்.

பலத்த காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஸ்ரீநிதியும் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. அசகளத்தூர் கிராமத்தில் தாயும் சேயும் தீயில் எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுமதியின் அப்பா சின்னசாமி பெங்களூருவில் இருந்து வந்து தனது மகள் சுமதிக்கு பேய் பிடித்ததால் தன்னைத்தானே வெட்டிக் கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் என்றும் வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 


இது சம்பந்தமாக புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், அசகளத்தூரில் உயிரிழந்த சுமதி மற்றும் அவரது குழந்தை ஸ்ரீநிதியின் சடலத்தை சாலையில் வைத்து இறந்துபோன சுமதியின் கணவர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் செய்தனர். சுமதி தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் சம்பவத்தன்று சுமதிக்கும் அவரது தங்கை சுஜாதாவிற்கும் வீட்டிற்குள் கடும் சண்டை நடந்துள்ளது எனவும் ஆத்திரத்தின் உச்சியில் சுமதியும், குழந்தை ஸ்ரீநிதியும் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறினர்.

எனவே உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுமதியின் தந்தை சின்னசாமி சொந்தமாக 20 சென்ட் நிலம் வாங்கியுள்ளதாகவும் அதனை பெறுவதில் சுமதி மற்றும் சுஜாதாவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறை தொடர்ந்து சுமதி மற்றும் சுமதியின் குழந்தை ஸ்ரீநிதியையும் அரிவாளால் வெட்டி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி சுஜாதா கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சுஜாதாவை கைது செய்த வரஞ்சரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசகளத்தூரில் சொத்திற்காக அக்கா மற்றும் அவரது குழந்தையை கொலை செய்த தங்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.