அம்பத்தூர் அருகே தம்பியை தீர்த்துக்கட்ட வலைவீசிய போது சிக்கிய அண்ணனை தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை வில்லிவாக்கம் கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி என்ற போண்டா பாலாஜி (27). பெயிண்டர் வேலை செய்து வந்த இவருக்கு, திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். .இந்தநிலையில் பாலாஜி அம்பத்தூர் அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள் பாலாஜியை வழிமறித்து கத்தியால் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை நடக்கும் அரை மணி நேரத்திற்கு முன்பு அதே பகுதியில் சதீஷ் - சீனிவாசன் (இறந்த பாலாஜியின் தம்பி) இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும் அந்த மோதல் விரோதம் காரணமாக சீனிவாசனை தேடி வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சீனிவாசனின் அண்ணன் பாலாஜியை தீர்த்துக் கட்டியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் பாலாஜியின் தம்பி சீனிவாசன் அத்திப்பட்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் அவரது நண்பரான சதீஷ்குமார் என்பவரின் வீட்டில் நகைகள் தொலைந்து போன விவகாரத்தில் சதீஷ் சீனிவாசனை சந்தேகித்து தேடி வந்துள்ளார். இந்நிலையில் பாலாஜியை சதீஷ் மற்றும் அவருடன் வந்த மூன்று நபர்கள் வெட்டி விட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் 2 உதவி ஆணையர்கள் 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். போண்டா பாலாஜி மீது ஏற்கனவே ஐ.சி.எப். காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பத்தூர் அருகே குடியிருப்புக்கு மத்தியில் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.