உசிலம்பட்டி அருகே காதலித்த பெண்ணை திருமனம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆயுதப்படைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி காலணியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு திருமணம் முடித்து வைக்குமாறும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது விடுமுறை காரணமாக சொந்த ஊரான நக்கலப்பட்டிக்கு வந்த சதீஸ் மீண்டும் பெற்றோரிடம் காதலித்த பெண்ணை திருமணம் முடித்து வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மீண்டும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காவலர் சதீஸ் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். நாளை பிப்-14 உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.