குற்றம்

சென்னையில் காவலர்களை திசைதிருப்பி ஓடிய நகைப்பறிப்பு திருடர்கள் - போலீஸ் வலைவீச்சு

kaleelrahman

சென்னையில் நகை பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, சம்பவ இடத்தில் விசாரணை செய்ய சென்ற போது காவலர்களின் கவனத்தை திசைதிருப்பி தப்பி ஓடிய 2 பேரை போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் பி.பி.ரோடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார் (60). இவரது மனைவி சுபாஷினி (54) இன்று காலை இவர்கள் இருவரும் பெரம்பூர் சுப்பிரமணியம் தெரு வழியாக நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணியாத 2 நபர்கள் சுபாஷினி கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி சரடையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றனர்.

இதுகுறித்து சுபாஷினியும் அவரது கணவரும் செம்பியம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளின் புகைப்படங்களை எடுத்தனர்.

இதனை தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஒரு திருடன் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அஜித் (19) என்ற நபரை பிடித்து செம்பியம் போலீசார் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) மற்றும் ராஜேஷ் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்களால் கொள்ளையடிக்கபட்ட 7 சவரன் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அஜித், தனது நண்பர்களிடம் நகை மற்றும் பொருட்களை கொடுத்து வைத்துள்ளதாகவும் அந்த நபர்களின் இருப்பிடத்தை போலீசாருக்கு அழைத்துச் சென்று காண்பிப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் போலீசார் அஜித் மற்றும் ஆகாஷை அழைத்துக்கொண்டு திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்வதற்காக சென்றபோது காவலர்களை திசைதிருப்பி சிறுநீர் கழிக்கச் செல்வதாக கூறி எதிரில் உள்ள தண்டவாளம் பகுதியில் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தப்பி ஓடிய குற்றவாளிகள் அஜித் மற்றும் ஆகாஷை பிடிப்பதற்காக துணை ஆணையர் ராஜேஷ்கண்ணா தலைமையில் 2 உதவி ஆணையர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.