குற்றம்

கோயில் உண்டியல் உடைப்பு : ஊரடங்கை பயன்படுத்தி கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

webteam

சீர்காழி அருகே ராதாநல்லூர் கோயில் உண்டியலை உடைத்து ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ராதாநல்லூர் கிராமத்தில் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடிமாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்போது பக்தர்கள் அங்கு உள்ள உண்டியலில் தங்களது நேர்த்திக்கடனுக்கு ஏற்றவாறு காணிக்கை செலுத்துவார்கள்.

கொரோனா, ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியுள்ளதாலும், கோயிலில் பக்தர்கள் வழி பட தடை விதிக்கப்பட்டதாலும், இந்த கோயிலில் ஒருகால பூஜை மட்டும் நடந்து வருகிறது. மற்ற நேரங்களில் இந்த கோயில் அமைந்துள்ள பகுதியில் ஆள் நடமாட்டம் இருப்பதில்லை.

இந்நிலையில், இன்று காலை கோயிலுக்கு வந்த பூசாரி கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிசென்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். விசாரணையில் கோயில் உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் பணம் இருந்திருக்கும் என தெரியவந்துள்ளது. ஊரடங்கை சாதகமாக்கி மர்ம நபர்கள் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.