மதுரவாயலில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியர்களிடம் குடிபோதையில் தகராறு செய்யும் சப்-இன்ஸ்பெக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டலுக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்த நபர் உணவு சாப்பிட்டார். உணவு சாப்பிட்ட உடன் கடை ஊழியர்கள் பணம் கேட்டதற்கு, கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரிடம் தான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்றும் தன்னிடம் பணம் கேட்பதா என ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார்.
மேலும் கடையின் விளம்பர போர்டுகளை வெளியே வைக்கக்கூடாது உள்ளே வைக்க வேண்டும் என கடை போர்டை தூக்கி வைத்துள்ளார். நாளை முதல் போர்டு வெளியே இருக்கக் கூடாது. அடுப்புகள் எல்லாம் உள்ளே இருக்க வேண்டும் என மிரட்டி விட்டு சென்றுள்ளார். இந்த காட்சிகளை அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
குடிபோதையில் தகராறு செய்த சப்-இன்ஸ்பெக்டர் அரிநாத் என்பதும், இவர் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் உள்ள செல்போன் டவர்மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் அங்குள்ள ஹோட்டல்களில் வந்து சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டால் அவர்களை மிரட்டி விட்டு செல்வதாக கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இதனை தட்டி கேட்ட ஒருவரின் செல்போனை தட்டி விட்டதில் அந்த செல்போன் உடைந்து உள்ளது.
குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கடை முன்பு தகராறு செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.