குற்றம்

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தாத்தா, சித்தப்பாக்கள், அண்ணன்களின் குற்றம் அம்பலம்!

webteam

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாத்தா மற்றும் 3 சித்தப்பாக்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை போக்‌சோ சிறப்பு நீதிமன்றம், இரு சகோதரர்களுக்கும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் வசித்த ஒரு தம்பதி, தங்களது 13 வயது மகளை விட்டுவிட்டு பிரிந்துவாழும் நிலையில், அச்சிறுமி தாத்தாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தாத்தாவின் குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமை செய்வதாக பள்ளி நிர்வாகத்திடம் சிறுமி தெரிவித்துள்ளார். அதன்பின்னர் பள்ளி நிர்வாகம் தரப்பில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குழு காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாத்தா, மூன்று சித்தப்பாக்கள், மற்றும் சித்தப்பாக்களின் மகன்களான 2 சகோதரர்கள் என 6 ஆறு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆவதாக கூறி, 6 பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அதன்படி சிறுமியின் தாத்தா மற்றும் 3 சித்தப்பாக்கள் ஆகிய நால்வருக்கு ஆயுள் தண்டனையும், நால்வருக்கும் சேர்த்து ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சகோதரர்களில் ஒருவருக்கு 10 சிறை தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்ததுடன், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.