மகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை கணபதி காவல்துறையினர் குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வருபவர்கள் சாரதா மற்றும் அவரது இரண்டரை வயது மகன் ஜஸ்வந்த். சாரதாவின் கணவர் குணவேல் (32) பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் குணவேல் 3 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வரும்போது மனைவி சாராதாவுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டிற்கு வந்த குணவேல் மீண்டும் மனைவி சாரதாவுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த சாரதாவின் தந்தை தியாகராஜன் (55) ஆத்திரமடைந்ததில், வீட்டிலிருந்த கத்தியால் குத்தி குணவேலை கொலை செய்து விட்டு தப்பியோடினார். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தியாகராஜனையும் தேடி வருகின்றனர்.