சென்னை திருவான்மியூர் தந்தையின் கொலைக்கு பழித்தீர்க்கும் விதமாக ரவுடி கந்தா ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த சின்னையா என்பவரை கந்தகுமார் கொலை செய்துள்ளார். அதற்கு பழித்தீர்ப்பதற்காக சின்னையாவின் மகன்களான இரட்டையர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி கந்தாவை ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ளனர்.
கந்தகுமார் சின்னையா என்பவரை கொலை செய்த பிறகு மயிலாப்பூரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் திருவான்மியூருக்கு வருவதை அறிந்த சின்னையாவின் மகன்கள் அவர்களது நண்பர்களோடு சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கொலை செய்து விட்டு சாலையிலேயே எங்கள் தந்தையை கொன்றவனை பழித்தீர்த்து விட்டோம் என சாலையிலே அனைவரிடமும் கூறியுள்ளார். இதனைக் கேட்ட பொதுமக்கள் திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்து விட்டு ஆறு பேர் கொண்ட கும்பல் பல்வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அவ்வாறு தப்பிச் செல்லும் போது நீலாங்கரையில் போலீசாரை கண்டு இளைஞர் ஒருவர் ஓட முயன்ற போது அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்ததில் திருவான்மியூர் கொலை வழக்கில் தொடர்புடையவன் என்பது தெரியவந்தது. இந்நிலையில் கொலையில் தொடர்புடைய சின்னையாவின் மகன்கள்( இரட்டையர்கள்) சதீஷ், சந்தோஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை திருவான்மியூர் போலீசார் தேடி வருகின்றனர்.