குற்றம்

கொலை முயற்சியை தடுத்து, குற்றவாளிகளை துரத்திப் பிடித்த காவலர்கள்- பாராட்டிய சென்னை கமிஷனர்

newspt

சென்னை பேசின்பிரிஜ் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்ந நபரை வழிமறித்து, கொலை செய்ய முயன்ற குற்றவாளிகளை விரட்டிப் பிடித்த காவல்துறையினரை, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

சென்னை திருமங்கலம் எம்.வி.என். தெருவில் வசித்து வருபவர் தினேஷ்குமார். இவர் கடந்த, 12-ம் தேதி இரவு. சுமார் 10.30 மணியளவில் பேசின்பாலம் பவர் ஹவுஸ் அருகே, தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள், தினேஷ்குமாரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த தினேஷ்குமார், தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அப்போது இந்தச் சம்பவ இடத்திற்கு அருகில், கண்காணிப்பு பணியிலிருந்த பேசின்பாலம் காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் மற்றும் தலைமைக் காவலர் மோகன்குமார் ஆகியோருக்கு தினேஷ்குமாரின் கூச்சல் கேட்டுள்ளது. இதையடுத்து காவலர்கள் இருவரும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயங்களுடன் இருந்த தினேஷ்குமாரை பத்திரமாக மீட்டனர்.

மேலும் துரிதமாக செயல்பட்ட காவலர்கள், தப்பியோடிய 3 குற்றவாளிகளில் இருவரை, துரத்திச்சென்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த தினேஷ்குமாரை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், காயமடைந்த தினேஷ்குமார், தனது மனைவி சுடர்மதியை பிரிந்து வாழ்ந்து வருவதும், தற்போது சுடர்மதி வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் தொடர்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், ராஜேஷின் தூண்டுதலின் பேரில், அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சீவ்குமார், பிரதீப்குமார், அஸ்வின்குமார் ஆகிய மூவரும், தினேஷ்குமாரை கத்தியால் தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகளிடமிருந்து பட்டா கத்தி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது .

குற்றவாளி சஞ்சீவ்குமார், அயனாவரம் காவல் லைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர்மீது கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. கண்காணிப்பு பணியின் போது துணிச்சலுடன் சிறப்பாக செயல்பட்டு கொலை சம்பவத்தை தடுத்தது, சரித்திரப்பதிவேடு குற்றவாளி உட்பட 2 குற்றவாளிகளை துரத்திச்சென்று கைது செய்தது, படுகாயமடைந்த தினேஷ்குமாரை தக்க சமயத்தில் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, பேசின்பாலம் காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் மற்றும் தலைமைக் காவலர் மோகன்குமார் ஆகிய இருவரையும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.