குற்றம்

படித்தது ப்ளஸ் 2.. பார்த்தது எம்.பி.பி.எஸ் மருத்துவம்.. கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது

webteam

திருத்தணியில் பிளஸ் டூ வரை படித்து முடித்துவிட்டு வைத்தியம் பார்த்த போலி டாக்டர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் என‌ 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சத்யசாய் நகரில் வசிப்பவர் பூபாலன் (வயது 50). இவர் திருத்தணி அக்கையநாயுடு தெருவில் உள்ள ஒரு வீட்டில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பிளஸ் 2 முடித்துவிட்டு ஒருவர் மருந்து, ஊசிகள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்க்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் காவலன் நேற்று அக்கையநாயுடு தெருவில் இயங்கிவரும் போலி கிளினிக்கிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்கு ஆய்வு செய்தபோது பூபாலன் பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் செய்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட இணை இயக்குநர் காவலன், திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திருத்தணி போலீசார் விரைந்து வந்து போலி டாக்டர் பூபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பர் மத்தூர் கிராமத்தை சேர்ந்த கோபி உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் பூபாலன் மனைவி திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் மருந்துக்கடை நடத்தி வந்ததும், அதில் பணிபுரிந்த அனுபவத்தின் பேரில் தனியார் கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. மேலும் பூபாலன் சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்துவந்ததும், அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் திருத்தணியில் கிளினிக் வைத்து போலி மருத்துவம் பார்த்து பணம் சம்பாதிக்க இச்செயலில் ஈடுபட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

இதையும் படிக்க: தருமபுரி: ரூ.1 கோடி பணம் கேட்டு மாணவனை கடத்திய 7 பேர் கொண்ட கும்பல் கைது