குற்றம்

கரூரில் பயங்கரம் - சட்டவிரோத கல்குவாரியை மூட வலியுறுத்தி போராடியவர் லாரி ஏற்றிக் கொலை?

webteam

கரூரில் சட்ட விரோதமாக இயங்கும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தி போராடியவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக 3 பேர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கா.பரமத்தி அருகே குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும், அவரது தோட்டத்திற்கு அருகில் உள்ள கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் தன்னை கொலைசெய்ய முயற்சி செய்ததாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜெகநாதன் பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செல்வகுமார் நடத்தி வரும் கல்குவாரிக்கான உரிமம் முடிந்து விட்டதாகவும், அவர் சட்ட விரோதமாக தொடர்ந்து நடத்தி வருவதாகவும் கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து ஜெகநாதன் கனிம வளத்துறைக்கு பல்வேறு புகார் மனுக்களை அனுப்பியுள்ளார். இந்தச் சூழலில், ஜெகநாதன் தனது வீட்டிலிருந்து காருடையாம் பாளையம் என்ற இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணையில், ஜெகநாதன் மீது மோதிய லாரி, கல்குவாரி உரிமையாளர் செல்வகுமாருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. இதனால் சட்ட விரோத கல் குவாரிகளை எதிர்த்து போராடியதால் ஜெகநாதனை கல்குவாரி உரிமையாளர் லாரி ஏற்றி கொலை செய்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் மனைவி ரேவதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், லாரி ஓட்டுநர் சக்திவேல், ரஞ்சித் ஆகிய மூன்று பேர் கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர்.

- கண்ணன்