கொலை செய்பவர்களை கடித்து காயப்படுத்தும் வழக்கத்தைக் கொண்ட வேலூரை சேர்ந்த சைகோ கொலையாளியை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரத்தினம்மாள், வல்லம்மாள் என்ற இரண்டு மூதாட்டிகள் தலையில் கல்லால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் இருவரின் உடல்களும் பல்லால் கடித்து காயப்படுத்தப்பட்டு இருந்தது. ஒரே பாணியில் இரண்டு கொலைகள் நடந்ததை அடுத்து, சித்தூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரபிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் கைரேகையும், கொலை செய்யப்பட்ட இடங்களில் சேகரித்த கைரேகையும் ஒத்துப்போனது. இதையடுத்து சோளிங்கர் விரைந்த ஆந்திர காவல்துறையினர் சைக்கோ கொலையாளி முனுசாமியை கைது செய்தனர்.
முனுசாமியை பற்றி கூறிய சித்தூர் மாவட்ட எஸ்.பி.ராஜசேகரபிரபு, கடந்த 1992ஆம் ஆண்டு திருடத் தொடங்கிய முனுசாமி பின்னர் கொலையாளியாக மாறியதாக கூறினார். தொடர்ந்து திருடுவதும், சிறையில் இருப்பதும், முனுசாமிக்கு வாடிக்கையாக இருந்துள்ளது. இதனிடையே பசிக்கு உணவு கேட்டு கொடுக்காத வீட்டில் பெண்ணை கொலை செய்தது, செல்போனை தர மறுத்ததற்காக ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்தது, 200 ரூபாய் பணத்திற்காக கொலை என முனுசாமி கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் 8 கொலைகள் செய்துள்ளார். ஆனால் கொலை செய்யப்பட்ட பெண்களிடமிருந்து நகைகள் எதையும் அவர் எடுத்துச் சென்றதில்லையாம்.சைக்கோ கொலையாளி முனுசாமி கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக ஆந்திர எல்லையோர கிராமமக்கள் நிம்மதி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.