அமெரிக்காவில் படித்து வரும் சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவதாகக் கூறி, ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக, குடும்ப நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 55 வயதான பெண் ஒருவர், காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அமெரிக்காவில் படித்து வரும் தனது மகளிடம் அவரது அந்தரங்க புகைப்படத்தை அனுப்பிய நபர், ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் தராவிட்டால் அந்தப் படத்தை இணையத்தளத்தில் பதிவேற்றிடுவதாக மிரட்டியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். புகைப்படத்தை அனுப்பிய தொலைபேசி எண்ணைக் கொண்டு விசாரித்த காவல்துறையினர் போரூர் லட்சுமி நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், ரமேஷ் அமெரிக்காவில் இருந்தபோது, அந்த இளம்பெண்ணுடன் அறிமுகமாகி குடும்ப நண்பராக வீட்டுக்குச் சென்றபோது ரகசியமாக அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாகக் கூறியுள்ளார். தங்களிடம் வாங்கிய 50 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தராமல் ஏமாற்றியதால் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் ரமேஷ் கூறியுள்ளார்.