குற்றம்

ஹரியானாவில் சரக்கு வாகனத்தை ஏற்றி போலீஸ் அதிகாரி கொலை : சுரங்க மாபியா கும்பல் அட்டூழியம்

webteam

ஹரியானா மாநிலத்தில் சுரங்க மாபியா நடவடிக்கைகளை தடுக்கச் சென்ற போலீஸ் அதிகாரி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள நூ பகுதியில் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் அப்பகுதியில் சட்ட விரோதமாக சுரங்கம் வெட்டப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர சிங் பிஷனோய், இரு காவலர்களுடன் அங்கே சென்றுள்ளார். அப்போது அங்கே சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனத்தை அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வாகனத்தை நிறுத்தாத வாகன ஓட்டி, நேராக அந்த வாகனத்தை சுரேந்திர சிங் பிஷனோய் மீது மோதி அவரை கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே சுரேந்திர சிங் பிஷனோய் உயிரிழந்த நிலையில் அவர் உடன் இருந்த இரு காவலர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஹரியானா மாநிலத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் நடைபெறுகிறது என்றும் இத்தகைய சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் மாபியா கும்பல்கள் சட்டத்துக்கு பயப்படுவதே இல்லை எனவும் பலரும் குற்றம் சாட்டி உள்ளனர். உயிரிழந்த போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு உரிய நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் எனவும், மாபியா கும்பல்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படிக்கலாம்: கொள்ளையனை வசமாக பிடித்துக் கொடுத்த கொசுக்கள்! சீனாவில் விநோத சம்பவம்