குடும்பம் நடத்த வராத மனைவியை கணவர் அடித்ததால் ஆத்திரமடைந்த மாமனார், மருமகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவுண்டப்பனூர் சிவதான வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (35) கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகள் மாதம்மாள் (30) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மாதம்மாள் கணவன் சுதாகரை பிரிந்து வந்து தன் தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து சுதாகர் பலமுறை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மனைவி மாதம்மாளை அழைத்துள்ளார். ஆனால் மாதம்மாள் கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என மறுத்துவிட்டார்.
நேற்று காலையும் சுதாகர் தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி மாதம்மாளை அழைத்துள்ளார். பிடிவாதமாய் கணவனுடன் செல்ல மாதம்மாள் மறுக்க ஆத்திரமடைந்த சுதாகர் மனைவியை அடித்துள்ளார். இதை அறிந்த சுதாகரின் மாமனார் சீனிவாசன், கத்தியை எடுத்துச் சென்று சற்றும் எதிர்பாராத நிலையில் மருமகன் சுதாகரை சரமாரியாக வெட்டியுள்ளார். தலையின் பின் பகுதியிலும் கழுத்திலும் கத்தியால் தாக்கப்பட்ட சுதாகர் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் கூற சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் 108 ஆம்புலன்சை வரவழைத்து சுதாகரை திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். ஆனால் பலத்த காயங்களுடன் இருந்த சுதாகரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் மாமனார் சீனிவாசனை கந்திலி காவல் துறையினர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். மாமனார் மருமகனை கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.