குற்றம்

கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர் - சிக்கியது எப்படி?

கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர் - சிக்கியது எப்படி?

webteam

விருத்தாசலத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்ன வடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரின் மகன் அற்புதராஜ் (20). விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கும் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்த சுதாகர் நகரைச் சேர்ந்த லதா என்பவரின் மகள் சக்தி (18) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தனர்.

இதில் கர்ப்பமான சக்தி, அற்புதராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி உள்ளார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டு சக்தியின் தாய் லதா வீட்டில் தங்கி இருந்தனர். தற்போது சக்தி 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என தன்னுடைய கணவர் அற்புதராஜிடம் கூறியுள்ளார்.

ஆனால் அற்புதராஜ் ஏற்கனவே கடன் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் வளைகாப்பு நடத்த முடியாது எனக் கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சக்தி, முகம் கழுத்து ஆகிய இடங்களில் ரத்த காயத்துடன் கிடந்துள்ளார். இதையடுத்து வீட்டுக்கு வந்த அவரது தாய் லதா, சக்தி இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாச்சலம் போலீசார், சக்தியின் உடலை கைப்பற்றி சந்தேகத்தின் பேரில் அற்புதராஜிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தன்னுடைய மனைவி சக்தி வளைகாப்பு நடத்த வேண்டும் எனக் கூறினார். அதற்கு நான் மறுத்ததால் இருவருக்கும் காலை 10 மணிக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை வீட்டில் கிடந்த ஜல்லி கரண்டியால் தாக்கினேன். அதில் அவர் மயங்கி விழுந்தார். மேலும் ஆத்திரத்தில் அவரது கழுத்து முகத்தில் கையால் குத்தி விட்டு வீட்டில் இருந்து மார்க்கெட்டிற்கு சென்று விட்டேன்.

ஆனால், மீண்டும் மூன்று முறை வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவி சக்தி உயிரோடு இருக்கிறாரா? என பார்த்தேன். ஆனால் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். இந்நிலையில் மாமியார் வேலைக்கு சென்று விட்டதால் அவருக்கு போன் செய்தேன். வீட்டுக்கு சென்று சக்தியை பார்க்கும்படி கூறினேன். இதனயடுத்து வீட்டுக்கு வந்த மாமியார் லசா தன்னுடைய மகள் இறந்து கிடந்ததாக எனக்கு தகவல் கூறினார். நான் எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து எனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதேன். ஆனால், போலீசார், நான் தான் கொலை செய்தேன் என கண்டுபிடித்து விட்டனர் என ஒப்புதல் அளித்துள்ளார். 

இதையடுத்து காதல் மனைவியை கர்ப்பிணி என்று கூட பாராமல் அடித்துக் கொன்று விட்டு நாடகமாடிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விருத்தாசலம் நிருபர்: கே.ஆர்.ராஜா