குடிபோதையில் நாயை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நகர் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருபவர் பிரவீன் குமார். இவர், தனது மகளுக்காக ஆசை ஆசையாக குட்டி நாய் ஒன்றை கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி கொடுத்துள்ளார். டிபி என்ற பெயருடன் வீட்டில் வளர்ந்த நாய் குட்டியை, மாலை நேரங்களில் வீட்டின் 4 வது மாடியில் விளையாட விடுவதை பிரவீன் குமார் வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி வீட்டின் மாடியில் செல்ல நாயை விளையாட விட்டு விட்டு பிரவீன் குமார், வேலைக்கு சென்றுள்ளார். பிறகு இரவு வீட்டிற்கு வந்தபோது மாடியில் இருந்து அவரது நாயை ஒருவர் கீழே தூக்கி வீசியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரவீன் குமார் ஓடிச் சென்று பார்த்தபோது அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் அவரது நண்பர் ஸ்டெல்லின் ஆகியோர் மதுபோதையில் இருந்தது தெரிந்தது.
இது தொடர்பாக பிரவீன் குமார் மெரீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் நடத்திய விசாரணையில், குடிபோதையில் இருந்த ஸ்டெல்லின் மாடியிலிருந்த நாயை கீழே தூக்கி வீசியது தெரிந்தது. இதையடுத்து மெரீனா போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 428- விலங்குகளை துன்புறுத்தி கொல்லுதல், 429- விலங்குகளை கொல்லுதல் மற்றும் மிருகவதை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்டெல்லினை கைது செய்தனர்.
விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ஆனால், நாய் இறந்ததால் அழுது கொண்டிருக்கும் மகளை தேற்றும் முயற்சியில் பிரவீன் குமார் ஈடுபட்டடுள்ளார்.