குற்றம்

நடிகை அமலா பால் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

JustinDurai

நடிகை அமலா பால் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நடிகை அமலாபால், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த ‘டேஸ்லிங் தமிழச்சி’ என்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். இதற்காக சென்னை தி.நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி வரும் ‘மான்ஜான்ஸ்’ டான்ஸ் பயிற்சி அகடாமியில் அமலா பால் பயிற்சி எடுத்தார். அப்போது, அழகேசன் என்பவர் அமலா பாலிடம், மலேசியா செல்லும்போது இப்ராகிம் என்பவருடன் இரவு உணவு அருந்த வேண்டும் என்று பேசியுள்ளார். இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமலா பால் கொடுத்த புகாரின் அடிப்படையில்,  ஸ்ரீதர், அழகேசன், பாஸ்கரன், இப்ராகிம் ஆகியோர் மீது தி.நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும் தொழிலதிபர் பாஸ்கரன், ஸ்ரீதரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், எந்த தொடர்பும் இல்லாத இந்த வழக்கில் தங்களை சேர்த்துள்ளதால்  வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, இரு தொழிலதிபர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாம்: ‘உன்கூட 100 வருஷம் வாழணும்’ : பொய்ச்சொல்லி மணமுடித்தவரால் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி