குற்றம்

விவசாயிகள் பணத்தை லட்சக்கணக்கில் மோசடி செய்த அலுவலர்களின் சொத்துக்கள் அதிரடி பறிமுதல்!

webteam

ஓமலூர் அருகே தாதியம்பட்டி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கையாடல் செய்த அலுவலர்களின் சொத்துக்களை அளவிடும் பணி நடைபெற்றது. அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள சிக்கனம்பட்டி பகுதியில் தாத்தியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தாராபுரம், தாத்தியம்பட்டி, சிக்கனம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் நகை கடன், பயிர் கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று வந்தனர்.

இந்தநிலையில், கடந்த 2006-ம் ஆண்டு வரை தாராபுரம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் செயலாளராகவும், இந்திராணி என்பவர் எழுத்தாளராகவும் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் கூட்டுறவு சங்கத்தில் நகை அடகு வைத்தவர்கள் பணத்தை திருப்பி செலுத்தியபோது, அந்த பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்துள்ளனர். இந்த கையாடல், அதிகாரிகள் தணிக்கையின்போது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கையாடல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடைய கையாடல் செய்த நடராஜன், இந்திராணி பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் அவரது உறவினர் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் கையாடல் செய்த தொகையின் மதிப்பு 30 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. அதனால், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் நில அளவை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாராபுரம் பகுதியில் உள்ள நடராஜன் மற்றும் இந்திராணி ஆகியோரின் சொத்துக்களை அளவீடு செய்தனர்.

இருவருடைய சொத்துக்களை அளவீடு செய்த அதிகாரிகள், இதுகுறித்த தகவல்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, சொத்துக்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.