செய்தியாளர்: L.M.ராஜா
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 21.01.2025-ம் தேதி பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளான சாமியார்மடம், உதயசூரியபுரம், ஆலடிக்குமுளை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளை உடைத்து தொடர் கொள்ளைச் சம்பவம் நடந்து வந்தது.
இதையடுத்து கடைகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்ற வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார், கொள்ளைச் சம்பவம் நடந்த இடங்களில் கிடைத்த தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்கி வசந்த் (20), சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பக்ருதீன் (18) மற்றும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இமானுவேல் விஜய் (எ) வெள்ளை விஜய் (21) ஆகியோரை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய பட்டுக்கோட்டை டிஎஸ்பி காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பாராட்டினார்.