செய்தியாளர்: ந.காதர்உசேன்
சொகுசு காரில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, தஞ்சை கோடியம்மன் கோயில் செக்போஸ்டில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் சந்தேகத்துக்கு உரிய வகையில் வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து காவல் துறையினர் அந்த காரை முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது பின் இருக்கையின் கீழ் இருந்த ரகசிய அறையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரில் வந்த பால்பாண்டி (40), ரவிக்குமார் (28), வீரப்பன் (26) ஆகிய மூன்று பேரையும் தஞ்சை மேற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியில் இருந்து அவர்கள் கடல் மார்க்கமாக கஞ்சாவை இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர், காரையும் காரில் கடத்தி வரப்பட்ட 103 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.