குற்றம்

தென்காசி: பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது

webteam

ஆயுதங்களுடன் தங்கியிருந்த பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட மாவடிக்கால் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஏஎஸ்பி சார்லஸ் கலைமணி மற்றும் புளியங்குடி டிஎஸ்பி அசோக் தலைமையில் அங்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள பருத்திவிளை தெருவில் உள்ள ஒரு வீட்டில் அந்த கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்தவர்களில் ஒருவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் கண்ணன் (எ) நெட்டூர் கண்ணன் (35) என்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மீது 46 வழக்குகள், 9 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இதுவரை 9 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, நெட்டூர் கண்ணனையும், அவருடன் இருந்த சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த முப்புடாதி (எ) அறு (27), அய்யனார்குளம் பகுதியைச் சூர்யா (20), ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (34), ரஸ்தா பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் கந்தன் (27), அய்யனார்குளம் பகுதியைச் சேர்ந்த சத்யா (22) ஆகிய 6 பேர் மீது பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தல், சதிதிட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு பெரிய அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடமன் நடைபெற்ற விசாரணையில், கைது செய்யப்பட்ட நெட்டூர் கண்ணன் மற்றும் முப்புடாதி (எ) அறு மீது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மற்ற 4 பேர் மீது ஒருசில வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர்கள் 6 பேர் மீது மொத்தமாக 80 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 6 பேரையும் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு, சங்கரன்கோவில் நீதிமன்ற நடுவர் சிவராஜேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.