நடத்துநர் pt desk
குற்றம்

தென்காசி: அரசு பேருந்து நடத்துநரை கத்தரிக்கோலால் குத்திய 17 வயது சிறுவன் கைது

தென்காசி அருகே அரசு பேருந்து நடத்துநரை கத்தரிக்கோலால் குத்திய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆழ்வான் துலுக்கப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் வெளியூரில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தென்காசியில் இருந்து ரயில் மூலம் தான் வேலை செய்யும் பகுதிக்குச் செல்ல முயன்ற பொழுது ரயிலை தவற விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மது அருந்திய அந்த சிறுவன் தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இதையடுத்து பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், நடத்துநர் அந்த சிறுவனை பாவூர்சத்திரம் அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் பேருந்து அநத வழியாக திரும்பி வரும்போது நடத்துநரை தாக்குவதற்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது நெல்லை பாபநாசத்தில் இருந்து சங்கரன்கோவில் வரை செல்லும் அரசு பேருந்து பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளது.

கைது

அப்பொழுது மது போதையில் இருந்த சிறுவன், பேருந்து நடத்துநரான அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்த முயன்றுள்ளார். அதனை தடுக்க முயன்ற போது நடத்துநரின் இடது காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு நின்றிருந்த போலீசார், சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்து நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.