குற்றம்

சர்வதீர்த்த குளத்தில் கச்சியப்பர் சிலையை வீசிய அர்ச்சகர்

சர்வதீர்த்த குளத்தில் கச்சியப்பர் சிலையை வீசிய அர்ச்சகர்

Rasus

காஞ்சிபுரம் முருகர் திருக்கோயிலில் வைக்கபட்டிருந்த கச்சியப்பர் வெண்கல சிலை திருடப்பட்டது தொடர்பாக கோயில் அர்ச்சகர் கைது செய்யபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோயில் நகரமாம் காஞ்சியில் மிகவும் புகழ்பெற்றது காஞ்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் எனப்படும் காஞ்சி குமரக்கோட்டம். இக்கோயிலில் காஞ்சி கச்சியப்பர் என்பவர் கந்தப்புராணத்தை இயற்றியது மற்றமொரு சிறப்பாக கூறப்படுகிறது. இத்திருக்கோயிலின் 13 சன்னதிகளில் மொத்தம் 53 வகையான சாமி சிலைகள் உள்ளன. கச்சியப்பருக்கும் 29 செமீ உயரமும் 18 செமீ அகலமும் 7.470 கிலோகிராம் எடை கொண்ட வெண்கல சிலை ஒன்று உண்டு. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இச்சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காஞ்சிபுரத்தின் முக்கிய நகர வீதிகளில் உலாவாக கொண்டுவருவது வழக்கம்.

இவ்விழாவானது கடந்த மார்ச் முதல் வாரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதனிடையே கோயில் சாமி உற்சவ சிலைகளுடன் வைக்கபட்டிருந்த கச்சியப்பர் வெண்கல சிலை மார்ச் 10-ம் தேதி காணாமல் போனதாக கோயில் குருக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். சிலை அறையில் பலமுறை தேடியும் கண்பிடிக்க முடியாத நிலையில் அன்று மாலை கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிலை திருட்டு குறித்து புகார் அளித்தார்.

இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டபோது கோயில் அர்ச்சகர் கார்த்திக் மீது சந்தேகம் வலுத்தது. அவரிடம் விசாரித்தபோது அருகிலுள்ள சர்வதீர்த்த குளத்தில் மது போதையில் வீசியதாக கூறியுள்ளார். குளத்தில் தீயணைப்பு துறை உதவியுடன் காவல்துறையினர் 6 மணி நேரம் தேடியுள்ளனர். ஆனால் சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து கார்த்திக்கின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அவரை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். திருடிய நபர் கிடைத்தாலும் சிலை தற்போது வரை மீட்கப்படாதால் பக்தர்கள் கவலையில்ஆழ்ந்துள்ளனர்.