குற்றம்

மனைவியை 70 துண்டாக வெட்டிய என்ஜினீயருக்கு ஆயுள்

மனைவியை 70 துண்டாக வெட்டிய என்ஜினீயருக்கு ஆயுள்

webteam

மனைவியை கொன்று உடலை 70 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய, சாஃப்ட்வேர் என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சாஃப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ் குலாதி. இவருக்கும் டெல்லியை சேர்ந்த அனுபமாவுக்கும் 1999ல் திருமணம் நடந்தது. அமெரிக்கா சென்ற இருவரும் 2008ல் டேராடூன் திரும்பினர். ராஜேஷூக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாம். இதை அனுபமா கண்டித்தார். இதனால் தினமும் வாக்குவாதம். 2010-ம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்தது. ராஜேஷ் தாக்கியதில் அனுபமா மயக்கம் அடைந்தார். பின்னர் அவர் முகத்தை, தலையணையால் அமுக்கி ராஜேஷ் கொன்றார்.

பின்பு, எலக்ட்ரானிக் வெட்டு இயந்திரத்தை பயன்படுத்தி, மனைவியின் உடலை 70 துண்டுகளாக வெட்டி, தனித் தனி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, குளிர்பதன பெட்டியில் பாதுகாத்தார். இந்த விஷயத்தை, 4 வயதே ஆன தன் இரட்டை குழந்தைகளுக்கு தெரியாமல் மறைத்து வந்தார். பின்னர், பிளாஸ்டிக் பைகளில் இருந்த மனைவியின் உடல் பாகத்தை நகரின் வெவ்வேறு பகுதிகளில் வீசினார். 

இந்நிலையில் அனுபமாவின் அண்ணன் சுஜன், சகோதரியிடம் இருந்து தகவல் வராததால் தேடி வந்தார். அவரிடம் அனுபமா பற்றி தெரியாது என்று கூறிய ராஜேஷ், அவரை வீட்டுக்குள் விடவில்லை. சந்தேகம் அடைந்த சஜன், போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷிடம் விசாரணை நடத்தி, வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, குளிர்பதன பெட்டியின் பிரீசர் பாக்சில் வைக்கப்பட்டிருந்த அனுபமாவின் தலையை கைப்பற்றினர். ராஜேஷை கைது செய்த விசாரித்ததில், மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.  பரபரப்பான இந்த வழக்கை டேராடூன் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ராஜேஷுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.