தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மாணவ-மாணவிகளை ஆபாசமாக பேசி, அடித்து துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள ஆனந்தபுரத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு பயிலும் மாணவர்கள், தங்களை ஆசிரியர்கள் தகாத முறையில் நடத்துவதாகவும் மாணவிகளை தனி அறையில் அடைத்து ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களால் மிகுந்த துன்பத்திற்கு ஆளான மாணவர்கள் செய்வதறியாது, தங்களது மாற்றுச் சான்றிதழ்களையாவது திரும்ப வழங்க வேண்டும் எனக்கூறி பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், ஆசிரியர்களான தேவகுமார், ஸ்டபின்ஸ், உதயசிங், சுகுமார், நவமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.