Police
Police Twittter
குற்றம்

”நாங்கள் காதலிக்கிறோம்”- ராஜஸ்தானில் ஆசிரியையுடன் காணாமல் போன மாணவி சென்னையில் மீட்பு! நடந்தது என்ன?

Jayashree A

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரில் சில தினங்களுக்கு முன் 12-ம் வகுப்பு மாணவி (17) ஒருவர், அவரது ஆசிரியை ஒருவருடன் மாநிலத்தை விட்டே வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவத்தில் காணாமல் போன மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து காவலர்கள் அவர்களைத்தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் சென்னையில் பிடிப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தின்படி ஜூன் 30ம் தேதி வழக்கம் போல் காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு கிளம்பி சென்ற மாணவி அன்று இரவாகியும் வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கவலையடைந்த மாணவியின் பெற்றோர் அவர் படிக்கும் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்பொழுது மாணவி, அவருக்கு பாடம் நடத்தும் ஆசிரியை ஒருவருடன்தான் பள்ளியிலிருந்து வெளியேறினார் என தெரியவந்துள்ளது.

FIR

இதனையடுத்து மாணவியின் பெற்றோர், அப்பகுதி காவல் நிலையம் சென்று “என் மகளின் ஆசிரியை, என் மகளை கடத்தி சென்றுவிட்டார். அந்த ஆசிரியை மற்றும் அவரின் இரு சகோதரர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவேண்டும்” என்று புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் காவல் துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்து காணாமல் போன இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் சோஷியல் மீடியா ஒன்றில் ஆசிரியையும் மாணவியும் காதலித்து வந்ததாக (தன்பாலின ஈர்ப்பாளர்கள்) வீடியோ ஒன்று வெளியானது. இது சர்ச்சையை இன்னும் அதிகப்படுத்தியது. இப்படியான நிலையில், காவல் துறையினர் இவர்களை பிடிக்க தீவிர கண்காணிப்பில் இறங்கினர். அதன் முடிவில் பல மாநிலங்களுக்கு சென்று தலைமறைவாக இருந்த அந்த ஆசிரியை மற்றும் மாணவி, இறுதியாக சென்னையில் பதுங்கியிருந்த பொழுது காவல்துறையினரால் கண்டறியப்பட்டனர். ஆசிரியை கைது செய்யப்பட்ட நிலையில், மாணவி மீட்கப்பட்டார்.

ஆள் கடத்தல், திருமணத்திற்கு கட்டாயப்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காகவும், குற்றச்செயலுக்கு சதி திட்டம் தீட்டியதாகவும் ஆசிரியை மற்றும் அவரின் சகோதரர்களின் மேல் போலிசார் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இவ்விவகாரத்தில் ஆசிரியை முஸ்லீம், மாணவி இந்து என்பதால் வலதுசாரி அமைப்புகள் லவ் ஜிகாத் புகார்களை முன்வைத்து வருகின்றன.