குற்றம்

தமிழ்நாடு கூட்டுறவு வங்கிக் கணக்கை ஹேக் செய்து ரூ.2.61 கோடி கொள்ளை - இருவர் கைது

webteam

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமையகத்தின் கணக்கை ஹேக் செய்து 2.61 கோடி பணத்தை கொள்ளையடித்த நைஜீரிய கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பாரிமுனையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் அந்த வங்கிக் கணக்கில் இருந்து 2.61 கோடி ரூபாய் பணம் திடீரென மாயமானது. அதன் பின் நடந்த விசாரணையில் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கிக்கு மெயில் மூலம் ஒரு லிங்கை நைஜீரிய ஹேக்கர்கள் அனுப்பி உள்ளனர். ஈமெயில் வந்திருப்பதை பார்த்த ஊழியர்கள் அதை கிளிக் செய்து ஒப்பன் செய்துள்ளனர். அப்போது ஹேக்கர்களின் மென்பொருள் வங்கியின் கணினியில் பதிவிறக்கம் ஆகியுள்ளது.

இதை ஏதோ ஒரு ஈ-மெயில் என அத்தோடு அதை வங்கி ஊழியர்கள் தவிர்த்துள்ளனர். வங்கியின் தொழில்நுட்ப ஊழியர்களும் அதை அறியவில்லை. அதன் பின் வங்கியில் தங்கள் மென்பொருள் ஹேக் செய்யப்பட்டு  இருப்பதை வைத்து, வங்கியின் கணக்கை ஹேக் செய்த நைஜீரியர்கள், கணக்கில் இருந்து ரூ.2.61 கோடி பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பணம் மாயமானது குறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்தது.

இதையடுத்து டெல்லி உத்தம் நகரில் பதுங்கி இருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.