குற்றம்

`கஞ்சா பதுக்கலில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் முடக்கம்’- அதிரடி காட்டும் தென்மண்டல ஐஜி அஸ்ரா!

நிவேதா ஜெகராஜா

322 கிலோ கஞ்சா பதுக்கலில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கி அதிரடி காட்டிய மதுரை தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். `கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் முடக்கப்படும்’ என மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

மதுரை மாவட்டம் உச்சப்பட்டி பகுதியில் கடந்த மார்ச் 24ஆம் தேதி ரூ.32,20,000 மதிப்பிலான 322 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த தெய்வம், ஜெயக்குமார், ரமேஷ், ராஜேந்திரன், குபேந்திரன், மாயி, மகாலிங்கம் ஆகிய 7 நபர்களை ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கஞ்சா கடத்தல் மூலமாக அவர்கள் ஈட்டிய பணம், சொத்துக்கள், உடமைகளை பறிமுதல் செய்வதற்கான சட்டத்தை பயன்படுத்தி கஞ்சா பதுக்கலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் தனிப்படை காவல்துறை சோதனை செய்தனர். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பெயரில் இவையாவும் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து கஞ்சா பதுக்கலில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான ரூ.56 லட்சம் மதிப்புள்ள 4 அசையா சொத்துக்கள், ரூ.16 லட்சம் மதிப்புள்ள 4 வாகனங்கள், 10 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதோடு, 29 வங்கி கணக்குகளையும் முடக்கி மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று கஞ்சா கடத்தலில் தொடர்புடையவர்களுடைய கஞ்சா வியாபாரிகளை கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை முடக்குவதற்காக தனிப்படை அமைத்து கண்காணித்து வருவதாகவும் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக கஞ்சா பதுக்கலில் ஈடுபட்ட நபர்களின் சொத்து மற்றும் உடமைகள் முடக்கம் செய்யப்பட்ட செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், “மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கஞ்சா தொழில் மூலம் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் அனைத்தும் சட்டப்படி முடக்கம் செய்யப்படும்” எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்தறையிடம் மதுரை ஐஜி அஸ்ரா கார்க், “கொலைகளை தடுக்க தவறிய எஸ்ஐ - இன்ஸ்பெக்டர் மற்றும் டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றப்பத்திரிகையில் தேவையான நிலங்களை பெயரை நீக்கவோ அல்லது சேர்க்கவோ குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் உடன் தொடர்பில் இருக்கும் காவல் துறையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மைக் மூலம் எச்சரித்து அதிரடி காட்டிய நிலையில், தற்போது கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் மற்றும் அவர்களது சொத்துக்களை முடக்கவும் அறிவித்திருப்பது பலரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.