குற்றம்

போலீஸ் அதிகாரி தவறாக நடக்க முயன்றதாக ட்விட்டரில் பதிவிட்ட பெண்-டிஜிபி சைலேந்திர பாபு உறுதி

சங்கீதா

சென்னை ஈசிஆர் சாலையில், கடற்கரையில் பெண் ஒருவரிடம் காவல்துறை அதிகாரி தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பெண், தனது நண்பருடன் இரவு 10 மணிக்கு பிறகு ஈ.சி.ஆர். கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி, தங்களை குற்றவாளிகள் போல நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். வட மாநிலங்களுக்கு சென்று இரவில் சுற்றும்படி அந்த காவல்துறை அதிகாரி, வடகிழக்கு மாநிலத்தவரான தம்மிடம் கூறியதாகவும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்குப் பதிவு செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இந்த ட்விட்டிற்கு பதிலளித்துள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, பணியிலிருந்த காவல் அதிகாரியின் பொறுப்பற்ற முரட்டுத்தனமான நடவடிக்கைக்காக வருந்துவதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.