குற்றம்

பாசி டிரேடிங் நிறுவன மோசடி வழக்கு.. 27 ஆண்டுகள் சிறை, ரூ.171 கோடி அபராதம்!

webteam

பாசி டிரேடிங் நிறுவனம் ரூ.930 கோடி மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.171 கோடி 74 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2011ல் பாசி டிரேடிங் என்ற ஆன்லைன் நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.930 கோடிமோசடி செய்தது. இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக கோவையில் உள்ள தமிழக முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) வழக்கு தொடரப்பட்டது. 2013ல் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

9 ஆண்டுகள் சாட்சி விசாரணை நடந்து வந்தது. அரசு மற்றும் எதிர்த்தரப்பு சாட்சியம், இருதரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து கடந்த 11ம் தேதி, 22ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க உள்ளதால் தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ரவி, மோசடி வழக்கின் தீர்ப்பை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், கமலவள்ளி, மோகன்ராஜ் இருவரும் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாசி நிறுவன வழக்கில் 2 பேருக்கும் 27 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.171 கோடி 74 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக கொண்டு வராததை கண்டித்து சிபிஐ க்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 58 ஆயிரம் பேரில் 1402 பேர் மட்டுமே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். 1402 பேரை தவிர பாதிக்கப்பட்ட மற்றவர்கள் தகுந்த ஆதரத்துடன் நீதிமன்றத்தை அனுகினால் இழந்த பணம் திருப்பி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மோப்பநாய் பயிற்சிக்கு வழங்கிய கஞ்சாவை முறைகேடாக பயன்படுத்திய 3 போலீசார் சஸ்பெண்ட்!