குற்றம்

சினிமாவில் ஹூரோயினாக்குறேன் ! பொய் கூறி துணை நடிகையிடம் பாலியல் வன்கொடுமை

சினிமாவில் ஹூரோயினாக்குறேன் ! பொய் கூறி துணை நடிகையிடம் பாலியல் வன்கொடுமை

webteam

சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி துணை நடிகையை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

போரூர், சக்தி நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இளம்பெண் உமா (பெயர் மாற்றம்).  தமிழ் சினிமா திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்றத்தூர் போலீசில் உமா தன்னை சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி 3 பேர் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக ஒரு புகார் அளித்து இருந்தார்.

அந்த புகாரில் கூறி இருப்பதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு குமார் என்பவர் தனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் சினிமா தயாரிப்பாளரிடம் பணி புரிந்து வருவதாகவும், புதிதாக எடுக்கும் படத்தில் தன்னை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும் தற்போது சினிமா தயாரிப்பாளர் சென்னை வந்துள்ளதால் நேரில் வந்தால் தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்து வைத்து விடுகிறேன் என்றும், போரூர் சிக்னல் அருகே வந்தால் காரி அழைத்து சென்று விடுவதாக கூறியதை நம்பி  நானும் அன்று இரவு போரூர் சிக்னல் அருகே காத்திருந்தேன். அப்போது காரில் வந்த நபர் ஒருவர் தன்னை குமார் என்று கூறினார். 

இதனை நம்பி காரில் அவருடன் சென்றேன். நான் சென்ற காரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பின் தொடர்ந்து வந்து குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிற்குள் சென்றதும் மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் கத்தியை காட்டி மிரட்டி 3 பேரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பின்னர் தன்னிடம் இருந்த செல்போன், நகைகள், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து வெளியே கூறினாலோ, போலீசில் புகார் அளித்தாலோ பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.


இதனால் அந்த 3பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உமா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் உமாவுக்கு வந்த செல்போன் போன் கால்கள், அந்த நபர்களின் அடையாளம், கார் நம்பரை வைத்து சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து துணை நடிகையிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.