குற்றம்

கல்லூரி மாணவி கொடுத்த பாலியல் புகார்: 13 வயதிலிருந்தே மாணவியை துன்புறுத்திய எஸ்.ஐ கைது!

webteam

சென்னையில் சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தப் புகாரில், காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் (50). சென்னை மாநகர காவல் துறையில் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்தப் பெண் ஒருவருடன், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் இருக்கிறார். அக்குழந்தைக்கு, கடந்த 2017-ம் ஆண்டு 13 வயது ஆகி உள்ளது. 

காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ், தாயுடன் உறவில் இருந்த போது சிறுமிக்கு 13 வயதிலிருந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியிடம் அத்துமீறி பல முறை பாலியல் வன்கொடுமையும் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியாக இருந்த அவர், தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் அந்த பெண்ணை, அதே காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் பாலியல் உறவுக்கு வருமாறு பல்வேறு விதங்களில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனைப் பொறுக்க முடியாத அந்தப் பெண் வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் மீது புகார் அளித்தார். இதனை விசாரணை செய்த வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய போலீசார், அந்தப் பெண் சிறுமியாக இருந்த காலகட்டத்தில் பலமுறை மிரட்டி காவல் உதவி ஆய்வாளர் பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.