குற்றம்

கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்ய வைத்ததாக புகார்: தலைமையாசிரியை கைது

webteam

ஈரோடு அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த புகாரில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 32 மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் உள்ள கழிவறையை குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை சுத்தம் செய்ய வைப்பதாக வீடியோ வெளியாகியது.

இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி தலைமை ஆசிரியை கீதாராணி மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் வட்டார கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கீதா ராணியை பெருந்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.