தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகளை ஏற்றிச்சென்ற லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் கிளீனர் முபாரக் பாட்ஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், மூன்றாம் நபருக்கான காப்பீட்டுத்தொகையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 4.5 லட்சம் சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. தொடர்ந்து 4-வது நாளாகத் தொடரும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால், தமிழகத்தில் காய்கறி விலை சற்றே உயர்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் கோவையிலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு தமிழக லாரி ஒன்று பொருட்களை ஏற்றிச்சென்றது. வாளையார் அருகே தமிழக லாரி சென்றபோது மர்ம நபர்கள் சிலர் லாரி மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் லாரியின் கிளீனர் முபாரக் பாட்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். வேலைநிறுத்தம் நடைபெறும் சூழலில் லாரியை இயக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக தெரிகிறது. கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு கேரள லாரி உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் சங்கத்தை சேர்ந்த யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் கேரள லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.