பள்ளிபாளையம் அருகே மர்மமான முறையில் 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், உடற்கூறு ஆய்வு முடிவில் அதிர்ச்சிக்கர தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள பூலக் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். பழ வியாபாரி. இவர் தனது மனைவியை பிரிந்த நிலையில் தனது மகனுடன், அதே பகுதியில் தனது கணவரை விட்டுப் பிரிந்த சரோஜினி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். சரோஜினிக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஆறு வயதில் டேனியல் என்ற மகனும் இருந்தனர்.
இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு குழந்தைகள் 4 பேரும் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக சண்டை போட்டதில் கீழே விழுந்த டேனியல் தலையில் பலத்த காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை குழந்தை டேனியலை, உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் குழந்தை அடித்துக் கொல்லப்பட்டதாக சான்று அளித்தனர். இதனையடுத்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சக்திவேல், சிறுவன் டேனியலை அடித்ததால் சுவற்றில் விழுந்து காயமடைந்து சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு செல்லும்போது உயிரிழந்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து பழ வியாபாரி சக்திவேலை கைது செய்த போலீசார் குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.