குற்றம்

பெண் குரலில் பேசி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 14 லட்சம் மோசடி: வடமாநில சகோதரர்கள் கைது

பெண் குரலில் பேசி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 14 லட்சம் மோசடி: வடமாநில சகோதரர்கள் கைது

kaleelrahman

பெண் குரலில் பேசி நூதன முறையில் 14 லட்சம் ரூபாய் மோசடி செய்த வடமாநில சகோதரர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவரான முதியவர் ஒருவர் சென்னை காவல் ஆணையரிடம் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு பெண் ஒருவர் திடீரென மெசேஜ் அனுப்பி, லண்டனை சேர்ந்த இவா வில்லியம்ஸ் எனக்கூறி பழகி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாளடைவில் அந்தப் பெண் மிகப்பெரிய பணக்காரர்போல் பாவித்து, பின்னர் சென்னையில் ஒரு இடம் வாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் இடத்தை பார்க்க வேண்டும் என சென்னைக்கு வருவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண் ஒருநாள் தனக்கு போன் செய்து இந்தியா வந்துவிட்டதாகவும், நிலம் வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் வரைவோலை வைத்திருந்ததால் டெல்லி விமான கஸ்டம்ஸ் அதிகாரிகள் தன்னை பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பிராசஸிங் மற்றும் கஸ்டம்ஸ் தொகையான 14 லட்சம் ரூபாய் வழங்கினால் அதிகாரிகள் விடுவார்கள் எனவும் அந்தத் தொகையை சென்னை வந்ததும் கொடுத்துவிடுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விமான கஸ்டம்ஸ் அதிகாரிகள் பலரும் நம்பும் படியாக பேசியதாகவும், பின்னர் ஒரே முறையில் ரூ. 14 லட்சம் அனுப்பமுடியாது என்பதால் அந்தப் பெண் அனுப்பிய 6 வங்கிக் கணக்கிற்கு 14.62 லட்சம் ரூபாயை அனுப்பியதாக தெரிவித்துள்ளார். பணம் அனுப்பிய பின் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்ததால் மோசடி நபர்கள் என தெரியவந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் உடனடியாக பணத்தை மீட்டுதரக்கோரி புகாரில் தெரிவித்துள்ளார்.

புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கை ஆய்வு செய்தனர். அது உத்தரப் பிரேதசம் மாநிலம் அலிகாரில் உள்ள ஏடி.எம்மில் மோசடி நபர்கள் பணத்தை எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தனிப்படை போலீசார் உத்தரப் பிரதேச மாநில அலிகார் பகுதி ஏடி.எம்மிற்கு விரைந்து மோசடி நபர்களின் சிசிடிவி காட்சிகளை எடுத்துள்ளனர். அதன் பிறகு வங்கிக் கணக்கை பயன்படுத்தக்கூடிய மோசடி நபரின் செல்போன் எண்ணை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதனடிப்படையில் டெல்லியைச் சேர்ந்த மஜித் சல்மானி மற்றும் இவரது சகோதரர் ஷானு ஆகிய இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில், மஜித் சல்மானி மற்றும் சானு ஆகியோர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மோசடி செயலில் ஈடுபட்டு வருவதும், கடந்த 2019ஆம் ஆண்டு மஜித் சல்மானி மோசடி செயலில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது, நைஜீரிய நாட்டை சேர்ந்த இம்மானுவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இம்மானுவேல் டெல்லியில் தங்கி மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக ரேண்டம் முறையில் எண்களை எடுத்து பெண் மூலமாக வாட்ஸ்ஆப்பில் பேச வைத்து பல பேரிடம் பணமோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். மோசடி செய்யப்பட்ட பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து தரக்கூடிய செயலில் மட்டுமே தாங்கள் ஈடுபட்டு வந்ததாகவும், அதற்கேற்ப இம்மானுவேல் கமிஷன் தொகை வழங்கி வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து 10 டெபிட் கார்டுகள், 3 செல்போன், சிம்கார்டுகளை சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து டெல்லியில் பதுங்கி இருந்த மோசடி கும்பலின் தலைவனான இம்மானுவேலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்ய சென்றபோது தலைமறைவாகி உள்ளார். பின்னர் அவரது வீட்டை போலீசார் சோதனை செய்த போது 51 ஆயிரம் பணம், 4 லேப்டாப், 10 செல்போன், 9 சிம்கார்டு ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய தலைவனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் சமூக வலைத் தளம் மற்றும் வாட்ஸ் ஆப்களில் வெளிநாட்டவர் எனக்கூறி பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், பணம் அனுப்ப கூறினால் உடனடியாக எண்ணை துண்டிக்குமாறும் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.