குற்றம்

சிவசங்கர் பாபா கைதை தொடர்ந்து மேலும் சிலர் கைது செய்யப்படலாம் - சிபிசிஐடி தகவல்

kaleelrahman

போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் கேளம்பாக்கம் பள்ளியில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை. அறையில் நடத்திய சோதனையில் லேப்டாப்கள், கணினி ஆகியவற்றை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பல மாணவிகள் சமூகவலைதளத்தில் குற்றம் சாட்டினர். இதனை அடுத்து எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட 3 புகார்களை வைத்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவசங்கர் பாபா மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில், அப்பள்ளியின் நிர்வாகிகள் விசாரணைக்கு ஆஜரானபோது, சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிவசங்கர் பாபா மீது புகார் அளித்த மாணவிகள் பல மாநிலங்களில் இருப்பதாகவும், டேராடூனில் பாபா சிகிச்சை பெற்று வருவதாலும், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து தனிப்படை ஒன்று டேராடூன் சென்று சிவசங்கர் பாபாவை கைது செய்ய விரைந்தது. இந்நிலையில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டதில், சிவசங்கர் பாபா தப்பி ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில போலீசார் டெல்லி சைபர் கிரைம் போலீசார் உள்ளிட்டோர் உதவியுடன் பாபாவை தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து டெல்லி காசியாபாத் பகுதியில் உள்ள சாகேத் என்ற இடத்தில் பக்தர் ஒருவரது வீட்டில் டெல்லி போலீசார் சிவசங்கர் பாபாவை கைது செய்து சிபிசிஐடி தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ட்ரான்சிட் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வரும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டனர். இதையடுத்து சிவசங்கர் பாபாவை தமிழகத்திற்கு கொண்டு செல்ல சிபிசிஐடி போலீசாருக்கு சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளத நிலையில், டெல்லியில் இருந்து இன்று இரவு அல்லது நாளை காலை தமிழகம் அழைத்துவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் பெண் ஆய்வாளர் தலைமையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்தை கடந்து சோதனையும் விசாரணையும் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் மூன்று பெண் காவல் றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள் பாரதி, தீபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுத்த மாணவிகளின் வாக்குமூலத்தில் பள்ளி ஆசிரியைகளின் பெயர்களை தெரிவித்துள்ளதால் அவர்கள் குறித்த விவரங்களை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

3000 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில்; 73 ஆசிரியர்கள் பணி புரிவதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களது பட்டியலை தயாரித்து அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக சிவசங்கர் பாபா மீது போடப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு தேவையான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பல முன்னாள் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக புகார் வந்ததையடுத்து அதற்கான ஆதாரங்கள் தீவிரமாக சேகரிக்கப்படுகின்றன. குறிப்பாக பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் ஆய்வு செய்கின்றனர். பள்ளியில் சிவசங்கர் பாபாவின் மிகப்பெரிய அறைக்கு அழைத்து சென்று (டழரபெந) மாண்விகளிடம் அத்துமீறி நடப்பதாக பல மாணவிகள் குறிப்பிட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கின்றனர். சிவசங்கர் பாபாவின் அறையில் சோதனை நடத்தி 4 லேப்டாப்கள், 2 கணினிகளை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். அதை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய உள்ளனர்.

மாணவிகள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் எந்தெந்த ஆசிரியர் உடந்தையாக செயல்பட்டார்கள் என்ற பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டதையடுத்து உடந்தையாக இருந்த மற்ற ஆசிரியர்களும் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்.சுப்ரமணியன்